ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம்

ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம்

by Staff Writer 10-05-2026 | 2:50 PM

Colombo (News 1st) தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று(10) சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் இரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர் ராகுல் காந்தி, தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

தமிழக முதல்வரின் பதவிப்பிரமாணத்தை தொடர்ந்து 09 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

என்.ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
கே.ஜி.அருண்ராஜ்
கே.ஏ.செங்கோட்டையன்
பி.வெங்கட ரமணன்
ஆர்.நிர்மல்குமார்
ராஜ்மோகன்
டொக்டர்.டி.கே.பிரபு
எஸ்.கீர்த்தனா
ஆகிய 09 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதன் பின்னர் 03 கோப்புகளில் கைச்சாத்திட்டார்.

02 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் '200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரம்' வழங்குவதற்கான முதலாவது கோப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கையொப்பமிட்டார்.

பெண்களின் பதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம்' எனும் கோப்பில் கையொப்பமிட்டதுடன்,

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க 'போதைப்பொருள் தடுப்புப்படை அலகுகள் உருவாக்கம்' எனும் கோப்பிலும் அவர் கையொப்பமிட்டார்.

பதவியேற்பு விழாவின் பின்னர் வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவை நாளை(11) காலை 09.30க்கு கூடவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இந்திய கமினியூஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனியூஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என்பன தமது ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.