.webp)
 (1)-618449-556941.jpg)
Colombo (News 1st) மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதற்கட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை முழுமையாகக் கையெழுத்தாகி விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானுடனான சந்திப்பின் போது ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூட் பெஸெஷ்கியனும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டு தற்போது அமுலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு திருப்புமுனை என அமெரிக்க ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.
14 பந்திகள் கொண்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை உருவாக்காது என்பதில் அமெரிக்காவும் ஈரானும் முழுமையான உடன்பாட்டை எட்டியுள்ளன.
ஈரானிடம் தற்போதுள்ள செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களை அகற்றுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பிராந்திய நாடுகளுடன் இணைந்து 300 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும், இந்த பிராந்திய நிதிக்காக அமெரிக்கா தனது பங்காக எந்தவொரு நிதியுதவியையும் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெபனான் உள்ளிட அனைத்து முனைகளிலும் இரு நாடுகளும் தமது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது அமுலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சு நடத்தி இறுதி மற்றும் விரிவான அமைதி உடன்படிக்கையை எட்டவும் திட்டமிட்டுள்ளன.
ஆரம்ப கட்டமாக 60 நாட்களுக்கு வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு எந்தவொரு கட்டணமும் இன்றி அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் பின்னர் ஓமான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் இணைந்து இந்த கடல்வழிப் பாதையின் எதிர்கால நிர்வாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்குவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை, புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதால் ஜெனீவா நகரில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த பௌதீக ரீதியிலான கையொப்பமிடும் நிகழ்வு நடைபெறாது என ஈரான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
