இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

by Staff Writer 29-04-2026 | 3:07 PM

Colombo (News 1st) துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீர பிணைகள் மற்றும் 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்  நேற்று முன்தினம்(27) கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணும் இன்று(29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவரும் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்வதற்காக குறித்த பகுதிக்கு சென்றபோது பெண்ணொருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி குறித்த பெண் கற்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.