.webp)

Colombo (News 1st) திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று(28) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதிகாரிகள் ஐவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தது.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் வழக்கு இன்று(28) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த சைபர் குற்றம் தொடர்பில் பல விடயங்களை வௌிக்கொணர்ந்தது.
அவுஸ்திரேலியாவுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் பின்னர் Export Finance Australia நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன் தவணை கொடுப்பனவு இவ்வாறு சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியின் கூற்று
மேற்கோள் ஆரம்பம்
குறித்த நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியான exportfinance.gov.au முகவரி ஊடாக முன்பிருந்தே கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிதி கொடுக்கல் - வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பப்படும் இன்வொய்ஸின் அடிப்படையில் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தினால் கடன் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதவான் அவர்களே, 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி இந்த மின்னஞ்சல் முகவரியின் டொமைன் நேம் மாற்றப்பட்டுள்ளதாக எனேபெல் நிறுவனத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த எச்சரிக்கையை கருத்திற்கொள்ளாமல் பணத்தை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் அவர்களே, உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி exportfinance.gov.au என்பதாகும். பின்னர் இந்த மின்னஞ்சல் முகவரி வணிக நோக்கத்தின் அடிப்படையில் exportfinance.av.com என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீதவான் அவர்களே, எனேபெல் நிறுவனத்தின் இந்த சைபர் கட்டமைப்பிற்குள் LOG ஆகி தரவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தரவுப் பரிசோதனையில் ஈமெயில் கட்டமைப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கப்பட்டுள்ளதாக இதுவரை விடயங்கள் வௌிக்கொணரப்படவில்லை.
மேற்கோள் நிறைவு
விசாரணை அதிகாரி தெரிவித்த எனேபல் நிறுவனம் நிதியமைச்சின் வௌிநாட்டு கொடுப்பனவு வசதிகளை வழங்குவதற்கான தகவல் சேவை வசதிகளை தயாரித்த நிறுவனமாகும்.
இதனிடையே, வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பை பரிசோதித்த போது சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என நீதவான் வினவினார்.
இதற்கு பதில் வழங்கிய விசாரணை அதிகாரி
மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் பெயரிடப்படவில்லை. பொதுச் சொத்துக்கள் சட்டம், கணினி குற்றங்கள் சட்டம் மற்றும் தண்டனை சட்டக்கோவை ஆகியவற்றின் கீழ் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று நீதவான் அவர்களே, வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் ஈமெயில் செய்தி மெஷினில் OUTLOOK-இல் தான் Download செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நீதவான் அவர்களே, இந்த பிரச்சினைக்குரிய சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிறுவனத்தில் கணினிகள் மாற்றமும் இடம்பெற்றுள்ளது.மேற்கோள் நிறைவு
இதனிடையே, இந்த சைபர் குற்றம் தொடர்பான தொழிநுட்ப விசாரணைகளுக்காக அரச இரசாயகப் பகுப்பாய்வாளர், கணினி அவசர பதிலளிப்பு மன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பீடத்தின் பீடாதிபதி ஆகியோரை பிரநிதித்துவப்படுத்தும் வகையிலான நிபுணர் குழுவை நியமிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
இதற்கு அனுமதி வழங்கிய கோட்டை நீதவான் நீதிமன்றம், தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் ஐவரினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கியது.
விசாரணைகளின் சிக்கலானதும் சூட்சுமமானதுமான தன்மையைக் கருத்திற்கொண்டு, வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தின் காப்பகத்தில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
