முறைப்பாட்டை மீளப்பெற்றார் நுவன் துஷார

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெற்றார் நுவன் துஷார

by Staff Writer 23-04-2026 | 2:19 PM

Colombo (News 1st) கிரிக்கெட் வீரர் நுவன் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் தொடர்களில் பங்கேற்பதற்கான ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிடும் கட்டாய இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவில் நடைபெறும் IPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான சான்றிதழை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்காமையால் இந்த மனுவை தாக்கல் செய்ததாக முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

IPL கிரிக்கெட் தொடரில் தற்போதும் சில போட்டிகள் நிறைவடைந்துள்ளதால் முறைப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது அர்த்தமற்றது என தெரிவித்த சட்டத்தரணி தனது சேவைபெறுநர் மனுவை மீளப்பெற விரும்புவதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறும் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் முறைப்பாட்டை மீளப் பெறுவதற்கு அனுமதி வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.