.webp)

Colombo (News 1st) நடிகை சாஷ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுபாஷினி பாலசுப்ரமணியம் இலங்கையிலும் இந்தியாவிலும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதுடன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறமையை வௌிப்படுத்தியிருந்தார்.
இலங்கையைச் சேர்ந்த 36 வயதான நடிகை சாஷ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் இலங்கையின் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்.
2024ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்த 38 வயதான Bipin Chandran என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்தியாவில் குடியேறினார்.
இந்தியாவில் சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளதுடன், இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நெடுந்தொடரிலும் நடித்து வந்தார்.
இந்தநிலையில் சென்னை, போரூர், ஐயப்பன் தாங்கலிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சுபாஷினி பாலசுப்ரமணியம் சடலமாக மீட்கப்பட்டதாக Times of india செய்தி வௌியிட்டுள்ளது.
படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வந்திருந்த நிலையில் அவர் குறித்த வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது கணவருக்கு இறுதியாக காணொளி அழைப்பை ஏற்படுத்தியிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நடிகை சாஷ்வி பாலாவின் மரணம் தொடர்பில் தமிழக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நடிகை சாஷ்வி பாலாவின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய கலைஞர்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
