.webp)

Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பான வழிகாட்டல் கோவை இன்று(22) வௌியிடப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
குறித்த வழிகாட்டி கோவை கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளுக்குள் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் அதிபர், பாடசாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார்.
வௌியிடப்படவுள்ள புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, பிரதான 05 பிரிவுகளுக்கு கீழான உணவுகளை பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அடங்கிய உணவுகள், அதிக உப்பு மற்றும் செயற்கை சுவையூட்டிகள் அடங்கிய உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், போசாக்கு குறைந்த, அதிக கலோரி கொண்ட உணவுகள், அதிமுறைப்படுத்தப்பட்ட உணவுகள் அவற்றில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களிடையே உடற்பருமன் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் 13 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களில 17.4 சதவீதமானோர் கார்பனேற் அடங்கிய பானங்களை அருந்துவதே இதற்கான பிரதான காரணமாகும் என அவர் தெரிவித்தார்.
