.webp)

Colombo (News 1st) சுமார் 50 வருடங்களின் பின்னர் மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச்செல்லும் நாசாவின் Artemis II திட்டத்தினூடாக
04 விண்வெளி வீரர்களை ஏற்றிய SLS ரொக்கெட் இன்று(02) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Space Launch System ரொக்கெட் மூலம் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஆரம்பமாகியுள்ளது.
SLS ரொக்கெட் 04 விண்வெளி வீரர்களையும் சுமந்து விண்ணில் பாய்ந்ததாகவும் தற்போது விண்கலம் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
Reid Wiseman, Victor Glover, Christina Koch ஆகிய அமெரிக்க விண்வெளி வீரர்களும் கனடாவின் Jeremy Hansen எனும் வீரரும் நிலவை நோக்கி பயணித்துள்ளனர்.
நிலவை சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த 10 நாள் பயணம், மனித குலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத ஆழமான பகுதிக்கு அவர்களை அழைத்துச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Artemis II நிலவில் தரையிறங்குவதற்கான திட்டம் அல்ல என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
மாறாக இது நிலவை சுற்றிவந்து பூமிக்கு திரும்பும் ஒரு சோதனை முயற்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்கலத்தின் ஆயுட்காலம், தகவல் தொடர்பு மற்றும் மனிதர்கள் தங்குவதற்கான வசதிகள் சரியாக காணப்படுகின்றதாக என்பதை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Artemis II திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து 2027ஆம் ஆண்டில் 'Artemis III' திட்டத்தின் மூலம் மனிதர்களை நிலவில் தரையிறக்க எதிர்பார்ப்பதாகவும் அதனை தொடர்ந்து 2028ஆம் ஆண்டில் 'Artemis IV' திட்டத்தின் மூலம் மனிதர்கள் மீண்டும் நிலவில் கால்பதிப்பார்கள் எனவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் 25 நாட்கள் நீடித்த 'Artemis I' திட்டத்தின் மூலம் 'Orion விண்கலம் மனிதர்கள் எவருமின்றி நிலவை சுற்றிவந்துள்ளது.
Artemis III திட்டத்திற்காக எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ரொக்கெட் அல்லது ஜெஃப் பெசோஸின் Blue Origin நிறுவனத்தின் ரொக்கெட்டை பயன்படுத்த நாசா எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதற்கு முன்னதாக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட நிலவிற்கான 'அப்பலோ திட்டம்', அதிக செலவுகள் காரணமாக 1972ஆம் ஆண்டில் கைவிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவை இட்டு விண்வெளி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பூமியிலும் விண்வெளியிலும் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் வெற்றி பெறும் எனவும் வேறு எவராலும் அதை நெருங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
