இடைத்தங்கல் விமான போக்குவரத்து மையமாக இலங்கை

இடைத்தங்கல் விமான போக்குவரத்து மையமாக இலங்கையை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தை

by Staff Writer 20-03-2026 | 7:06 PM

Colombo (News 1st) - மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் இடைத்தங்கல் விமான போக்குவரத்து மையமாக இலங்கையை மாற்றுவதற்கான எமிரேட்ஸ், கட்டார் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

மத்தளை சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் மோதல் இடம்பெறும்  பகுதிகளிலிருந்து தொலைவில் அமைந்துள்ளமை மற்றும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380 விமானங்களை கையாளக்கூடிய இலங்கையின் ஒரேயொரு விமான நிலையம் என்பதன் அடிப்படையில் மத்தளை சர்வதேச விமான நிலையம் மீது கவனம்​செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினூடாக மத்திய கிழக்கு நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள வர்த்தகங்களுக்கான வாய்ப்புகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கும் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் சுற்றுலா துறை மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியால் சுற்றுலா துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்புகளை இதனூடாக ஈடுசெய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஆசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா வரையில் பயணிக்கும் பல விமான வழித்தடங்கள் இலங்கைக்கு அருகில் இருப்பதால் விமான போக்குவரத்திற்கு மேலதிகமாக எரிபொருள் செலவின்றி மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலகுவாக வந்தடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.