யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

by Staff Writer 21-03-2026 | 7:13 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் இன்று(21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகளும் அவரது மருமகனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பாண்டியன்தாழ்வில் வசித்துவந்த 54 வயதுடைய தனது தாய் காணாமல் போனதாக பெண் விரிவுரையாளரின் மகன் நேற்று முன்தினம்(19) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனது தங்கை மற்றும் அவரின் கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விரிவுரையாளரின் 19 வயதான மகள் மற்றும் 21 வயதான மருமகன் ஆகியோரை  திருகோணமலையில் நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் உள்ள புதரில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக சந்தேகநபரான மகளையும் பொலிஸார் தனங்கிளப்பு பகுதிக்கு இன்று அழைத்துச்சென்றிருந்தனர்.

சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்தின் சமூக நலத்துறை தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர், டொக்டர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.