.webp)
-554892.jpg)
Colombo (News 1st) 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 09 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாவனெல்ல பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்தமை தொடர்பில் அப்போதைய தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை அநீதியான முறையில் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமைக்கு எதிராக குறித்த இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று(23) விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனத் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய கொடியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகப்பதிவை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் இளைஞரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்காக 02 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குவதாகவும் அப்போதைய தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்றில் தெரிவித்தார்.
குறித்த இழப்பீட்டு தொகையை பிரதிவாதியான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திறந்த நீதிமன்றத்தில் வைத்து இளைஞரிடம் கையளித்தார்.
