.webp)

Colombo (News 1st) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணி வங்ச தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் தீர்ப்பை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணி வங்ச தேரர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
எழுத்துபூர்வ சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருப்பின் மனுதாரர்கள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
நேற்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவை பிறப்பித்துடன் கடந்த 14, 19ஆம் திகதிகளில் மனுதாரர்களை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவுகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை இன்று(22) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
எனினும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மனுதாரர்களை காவலில் வைக்குமாறு ஜனவரி 14ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுப்பியிருந்தாலும் 19ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை அனுப்பவில்லை என நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.
அதன் பின்னர் நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளரை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து இது தொடர்பில் விசாரித்தது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா இது மிகவும் சந்தேகத்திற்குரிய சூழல் என சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழின் ஒரு பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
மற்றுமொரு மனுவை தாக்கல் செய்த அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா, நீதிமன்றத்தின் முன் கோரிக்கையை முன்வைத்து, ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பதிவுகள் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடர்பான பதிவை 19ஆம் திகதி பெற்றுக்கொள்ளும் வகையிலான உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரினார்.
19ஆம் திகதி அது தொடர்பான உத்தரவின் நகலையும் தொடர்புடைய பதிவையும் தாமதமின்றி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் தனது வழக்கை முன்வைத்து புத்தர் சிலையை மக்கள் வைத்தபோது அந்த பகுதியில் பொது அமைதியின்மை ஏற்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா கூறினார்.
இந்த நடவடிக்கை மத மற்றும் இனவாத மோதல்களுக்கு வழிவகுக்கும் என தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி பொாலிஸார் தன்னிச்சையாக புத்தர் சிலையை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ, உயர் நீதிமன்றத்தை நாடவும் இருவழிகளில் நிவாரணம் பெறவும் சட்ட விதிகள் இருந்தபோதிலும் மனுதாரர்கள் இந்த வழியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியாது என வலியுறுத்தினார்.
மனுதாரர்கள் விரும்பினால் உயர் நீதிமன்றத்தில் உத்தரவிற்கு எதிராக மீளாய்வு மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
கடலோர பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் பிணை மனுவை மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.
சட்ட விதிகளைப் பின்பற்றாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவை தாக்கல் செய்ய முடியாது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் எதிர்வரும் முப்பதாம் திகதி மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதாக உத்தரவிட்டது.
