சில ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரி..

சில ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 19-01-2026 | 11:20 AM

Colombo (News 1st)- எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஐக்கிய இராச்சியம், டென்மார்க் மற்றும் ஏனைய சில  ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நட்பு நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவை ஐரோப்பியத் தலைவர்கள் வன்மையாக  கண்டித்துள்ளனர். 

08 ஐரோப்பிய நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 10 சதவீத மேலதிக தீர்வை வரியை விதிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். 

டென்மார்க், நோர்வே, சுவீடன் , பிரான்ஸ், ஜேர்மன் , பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும்  புதிய வரி செல்லுபடியாகும்.

வரி விகிதத்தை இந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப் போவதாகவும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படும் வரை இது அமுலில்  இருக்கும் என  ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

ட்ரம்ப்பின் இந்த புதிய வரி விதிப்புக்கு பல ஐரோப்பிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 

இது முற்றிலும் தவறான செயல் என பிரித்தானிய  பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை  விற்பனை செய்யும் எண்ணம்  இல்லை  என டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. 

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்நாட்டுப் பிரஜைகளே தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபெட்ரிக் உட்பட பொதுமக்கள் பலர் தலைநகர் லூக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இராணுவ பலத்தைப் பயன்படுத்தியேனும்  கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள  அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மன் , சுவீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமது சிறிய அளவிலான படைகளை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தற்போதைய சூழ்நிலையினால் அமெரிக்காவிற்கும் நேட்டோ  அமைப்பிற்கும் இடையிலான உறவு  பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இவ்வாறானதொரு பின்னணியில் 25 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர்  உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பரகுவேயில் கையெழுத்திடப்பட்டது.