வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் 50mm மழை

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் 50mm மழை

by Chandrasekaram Chandravadani 30-12-2025 | 2:50 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்றுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.