ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு 02 வருட சிறைத்தண்டனை

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு 02 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 23-09-2025 | 2:39 PM

Colombo (News 1st) குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு 02 வருட சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் இன்று(23) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை செயற்படுத்துவதை தவிர்த்தமையின் ஊடாக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிபந்தனையின்றி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கடந்த ஜூலை முதலாம் திகதி உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டுகளில் தாம் 'குற்றமற்றவர்' என குறிப்பிட்டு முன்வைத்த சமர்ப்பணத்தையும் நீக்கிக்கொள்வதாக அவர் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

பிரதிவாதியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பிரதிவாதியான ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு தண்டனை வழங்கும் அறிவிப்பை இன்று வௌியிட திகதி நிர்ணயித்திருந்தது.