எல்ல பஸ் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை

எல்ல பஸ் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

by Staff Writer 22-09-2025 | 7:16 PM

Colombo (News 1st) 16 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்த எல்ல பஸ் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு சரியான தூக்கமின்மை, மலைப்பாங்கான பகுதியில் இருந்து பஸ் கீழே இறங்கி செல்லும் போது பிரேக் கட்டமைப்பு சரியாக  இயங்காமை மற்றும் பஸ்ஸினுள் பொருத்தப்பட்டிருந்த அங்கலார மின் விளக்குகள் காரணமாக சாரதியால் வீதியை அவதானிக்க முடியாமை என்பன விபத்திற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

எல்ல - வெல்லவாய வீதியின் 23ஆம் கட்டை பகுதியில் கடந்த 4ஆம் திகதி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருந்தது.

விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார்.

சுற்றுலா சென்றிருந்த தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரே விபத்தில் உயிரிழந்திருந்தனர்.