.webp)
Colombo (News 1st) தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட லொறியிலிருந்து 05 நவீன ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 ரக துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லொறியிலிருந்து 200 கிலோகிராமுக்கும் அதிக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களின் எடையை அளவிடும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, இன்று(22) முற்பகல் தங்காலை - சீனிமோதர பகுதியிலுள்ள வீட்டிலிருந்து ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் பொருட்களுடன் 02 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றுமொருவருக்கு வீட்டை விற்பனை செய்துள்ளார்.
வீட்டை கொள்வனவு செய்த நபர் 03 ஊழியர்களை ஈடுபடுத்தி வீட்டைச்சுற்றி மதில் சுவரை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த 03 ஊழியர்களும் நேற்றிரவு மதுபான விருந்துபசாரத்தை நடத்தியுள்ளதுடன் இதன்போது ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் உறவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய வீட்டை சோதனைக்குட்படுத்திய போது இருவர் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் மித்தெனியவிலுள்ள காணியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பத் மனம்பேரி வழங்கிய தகவல்களுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக மெகசின், 115 ரவைகள், கைக்குண்டு, 9 மில்லிமீட்டர் ரக உடைந்த கைத்துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குறித்த ஆயுதங்களை தன்னுடன் தொடர்பிலிருந்த பெண்ணின் வீட்டுக் காணியில் கடந்த 03ஆம் திகதி புதைத்து வைத்தமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.
மித்தெனியவிலுள்ள காணியொன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருளும் 02 கொள்கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரி கடந்த 17ஆம் திகதி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மித்தெனியவில் அவருக்கு சொந்தமான காணியில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொறுப்பிலுள்ள சம்பத் மனம்பேரி நேற்று மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இதுவரையான விசாரணைகளின் பிரகாரம் இன்றைய சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன் மித்தெனிய சம்பவம் தொடர்புபடுவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
மாத்தறை வெலிகம பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படும் இடம் தொடர்பில் நேற்று தகவல்கள் வௌிக்கொணரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்தே இன்று இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும் தலா 100 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள், T-56 ரக துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மீண்டும் இன்று சுமார் 150 கிலோகிராம் ஐஸ் மற்றும் சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பயணித்த லொறி கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தென் மாகாணத்தில் போதைப்பொருட்கள் தொடர்பில் எவரேனும் தகவல்கள் வழங்க வேண்டுமாயின் 071 85 91 992 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்க முடியுமென அவர் கூறினார்.