சுப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ்

by Rajalingam Thrisanno 17-09-2025 | 12:03 PM

Colombo (News 1st) ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை பங்களாதேஷ் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஆசிய கிண்ண  T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றது.

டன்ஷிட் ஹசன் 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும் ஷஹிப் ஹசன் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.

எனினும், ரஹ்மதுல்லா குர்பாஷ் 35 ஓட்டங்களையும் அஷ்மதுல்லாஹ் ஓமர்ஷாய் 30 ஓட்டங்களையும் ரஷித் கான் 20 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் கொடுத்தனர்.

ஏனைய வீரர்களால் பெரிதாகப் பிரகாசிக்க முடியாமல் போக ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

முஷ்டபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் நசும் அஹமட், டஸ்கின் அஹமட், ரிஷாட் ஹூசெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் இந்த வெற்றிக்கு அமைவாக சுப்பர் 4 சுற்றில் விளையாடும் எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

இந்தமுறை ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் பி குழுவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் அணி லீக் சுற்றில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.

லீக் சுற்றில் தாம் விளையாடிய 2 போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ள இலங்கை பி குழுவில் முதலிடம் வகிக்கிறது.

ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் இருக்கிறது.

இதற்கமைய இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகும் அணிகளை தீர்மானிக்கும் ஒன்றாய் மாறியுள்ளது.

நாளைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இலங்கை, பங்களாதேஷ் சுப்பர் 4 சுற்றுக்கு இலகுவாகத் தகுதிபெறும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளில் முன்னிலை பெறும் அணிகள் பி குழுவில் முதலிரண்டு இடங்களுடன் சுப்பர் 4 சுற்றை உறுதிசெய்துகொள்ளும்.

முதலிரண்டு 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை 4 புள்ளிகளுடன் பி குழுவில் முன்னிலை வகித்தாலும் இலங்கை 1.546 எனும் நிகர ஓட்ட வேகத்​தைப் பெற்றுள்ளது என்பதுடன் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 2.150 எனும் நிகர ஓட்ட வேகத்தைப் பெற்றுள்ளது.

இதனால் நாளைய போட்டியின் முடிவு பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளைப் போன்றே இலங்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.

ஏனைய செய்திகள்