.webp)
Colombo (News 1st) சிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இன்று(03) நடைபெற்ற முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 59 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது.
அணித்தலைவர் Sikandar Raza 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Brian Bennett 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்களை பெற்றார்.
சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றது.
வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
176 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்ததுடன் பெத்தும் நிஸ்ஸங்க 32 பந்துகளில் அதிரடியாக 55 ஓட்டங்களை விளாசினார்.
குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்து களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா, அணித்தலைவர் சரித் அசலங்க, முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்க ஆகியோர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
எனினும் நட்சத்திர சகலதுறை வீரரான கமிந்து மென்டிஸ் 04 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 16 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
03 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக கமிந்து மென்டிஸ் தெரிவானார்.