ஜனாதிபதியின் செயலாளர் - நெதர்லாந்து தூதுவர் இடையே சந்திப்பு

by Staff Writer 03-07-2025 | 6:11 AM

Colombo (News 1st) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbach ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ​நேற்று(02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது நெதர்லாந்தில் உள்ள இலங்கையின் பழங்காலப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மீளக் கொண்டுவருவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காலனித்துவ நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் காலனித்துவ காலத்து கலைப்பொருட்களை உரிய நாடுகளுக்கே மீண்டும் திருப்பி வழங்குவதற்கான கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இதற்கான ஆராய்ச்சித் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளதுடன் அந்நாட்டிலுள்ள காலனித்துவ கலைப்பொருட்கள் தொடர்பில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பமாக இலங்கையின் தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் தலைமையில் இருநாட்டு ஆய்வாளர்களும் நெதர்லாந்தில் உள்ள ஓலைச்சுவடி கையெழுத்துப் பிரதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.