கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம்

by Staff Writer 15-05-2025 | 7:11 AM

Colombo (News 1st) இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் குறித்தும் கண்டனம் தெரிவிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்து ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனைகளை வௌிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன் அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.

இந்த பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் இலாபத்திற்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.