ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை

by Staff Writer 25-04-2025 | 11:37 AM

Colombo (News 1st)  பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்துடன் வொஷிங்டன் டிசியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. 

இலங்கையின் தூதுக்குழுவினர் வொஷிங்டன் டிசியிலுள்ள(Washington, D.C) ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்தில் கடந்த 22ஆம் திகதி அதன் தூதுவர் Jamieson Greer-ஐ சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் Jamieson Greer-க்கு அனுப்பப்பட்ட கடிதப் பரிமாற்றத்தின் மூலப்பிரதி, நிதி அமைச்சர் ஜனாதிபதமி அனுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை தூதுக்குழுவினரால் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகொள்வதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாகக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பிரதிநிதிகளால் தூதுவர் Jamieson Greer-க்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.