.webp)
Colombo (News 1st) குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வட மாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால் அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்.பிராந்திய அலுவலகத்தை யாழ்.மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.