அமெரிக்க வரி தொடர்பில் ஆராய குழு நியமனம்

அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்

by Staff Writer 03-04-2025 | 1:29 PM

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரி தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெஃபர்ஜி ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 வீத தீர்வை வரியை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(03) அறிவித்திருந்தார்.