மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை-ஜெய்சங்ர்

மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்படும் - கலாநிதி ஜெய்சங்கர்

by Staff Writer 28-03-2025 | 11:03 AM

Colombo (News1st) 

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நேற்று கைது செய்யப்பட்ட 11 மீனவர்களுடன் இதுவரை 97 மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

மீனவர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் திருச்சி சிவா நேற்று மக்களவையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே  இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 564 மீனவர்களில் 501 பேர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் கடிதப்பரிமாற்றம் இடம்பெறுகின்றதே தவிர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர்,
1996ஆம் ஆண்டு மீன்வள மற்றும் நீர்வாழ் வளச்சட்டம் மற்றும் 1979ஆம் ஆண்டு வௌிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்குமுறை சட்டம் என மீனவர் விவகாரத்தில் இலங்கையில் 2 சட்டங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையிலேயே சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாகவும் படகு உரிமையாளர்களும் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டுவதால் இதனை இலங்கையுடன் கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

1974ஆம் ஆண்டு சர்வதேச கடல் எல்லை வரையப்பட்டதிலிருந்தே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.