தேஷபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிப்பு

by Staff Writer 17-03-2025 | 2:20 PM

Colombo (News 1st) கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லஃபார் தாஹீர் தலைமையிலான நீதிபதிகள் குழாத்தினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனுவை நிராகரித்த நீதிபதி மாத்தறை நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தேஷபந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அவர் மறைந்திருப்பதற்கு உதவும் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.