.webp)
Colombo (News 1st) இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் தனக்கென தனி அடையாளம் பதித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இன்று(02) நடைபெற்றன.
அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இன்று முற்பகல் நடைபெற்றன.
உடல் நலக்குறைவால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 82 ஆவது வயதில் மாவை சேனாதிராசா கடந்த 29 ஆம் திகதி காலமானார்.
அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், கல்விமான்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அன்னார் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
கிரியைகள் நிறைவுற்றதையடுத்து பூதவுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து வலிகாமம் வடக்கு தச்சன்காடு இந்து மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அன்னாரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கும் மத்தியில் தீயில் சங்கமமானது.
அமரர் மாவை சேனாதிராசா சிறந்த அரசியல் சாணக்கியமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவராவார்.