75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம்

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது

by Staff Writer 14-01-2025 | 7:22 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(14) 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் பல இடங்களிலும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 மில்லிமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(13) இரவு  முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதனால் சித்தாண்டி, வந்தாறுமூலை உள்ளிட்ட தாழ்நில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

இரம்புக்கனை ஓயா மற்றும் மாதுரு ஓயா வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து கிரானிலிருந்து குடும்பிமலைக்கு செல்லும் பிரதான வீதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

நீர்ப்பிரவாகம் அதிகரித்துள்ளமையால் கிரான் பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினூடாக இயந்திரப் படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முந்தணை ஆற்றிலிருந்து வருகின்ற அதிக நீர் காரணமாக சித்தாண்டி பகுதியை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

செங்கலடி செயலாளர் பிரிவிற்குட்பட்ட  ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவிற்கு செல்லும் சித்தாண்டி முதல் சந்தனமடு ஆறு வரையான தரைவழி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனால்  சித்தாண்டியிலிருந்து 2 மில்லிமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பெருமாவௌி பகுதி வரை இயந்திர படகுச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, எருவில், குருமன்வௌி உள்ளிட்ட பல தாழ்நிலப்பகுதிகளும் வௌ்ளத்தில்  மூழ்கியுள்ளன.

இதனிடையே, பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகின்றது.

பண்டாரவளை இருந்து வெலிமடை செல்லும் பிரதான வீதியில் மாதாட்டில்ல பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த பிரதான வீதியின் ஒரு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சோமாவதி சுங்காவில் வீதி மூடப்பட்டுள்ளதால் சோமாவதி புனித நகருக்கு யாத்திரைக்காக சென்றவர்கள், பஸ்களின் மூலம் வெலிகந்த ஊடாக திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை தடுக்கும் வகையில் பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நிலவும் பலத்த  மழையுடன் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைவதால், சோமாவதி சுங்காவில வீதி சோமாவதி புனித நகருக்கருகிலுள்ள சோமாவதி திக்கல பகுதியில்  மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சுமார் 2 மில்லிமீட்டர் பகுதி நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.