கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ - வட்டரப்பல பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 07-01-2025 | 7:13 PM

Colombo (News 1st)  கல்கிஸ்ஸ - வட்டரப்பல பகுதியில் இன்று(07) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இன்று(07) அதிகாலை 4.30 -முதல் 5 மணிக்கு இடையில் அடையாளம் காணப்படாத துப்பாக்கிதாரிகள் இருவர் வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காயமடைந்த மற்றையவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

படோவிட்ட அங்சக மற்றும் கொஸ் மல்லி எனப்படும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இருவருக்கு இடையேயான மோதலின் விளைவாகவே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இருவரும் தற்போது துபாயில் வசிப்பதாக பொலிஸார் கூறினர்.

படோவிட்ட அங்சகவின் உதவியாளரின் உறவினர் ஒருவரே இன்றைய துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 மற்றும் 20 வயதுகளை உடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.