Colombo (News 1st) "Clean Sri Lanka" திட்டம் தொடர்பில் பொய்யான கருத்துகளை வௌியிட்ட ஒருவரின் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸாரினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவொன்றை குறிப்பிட்டு பொதுமக்கள் தமது வீட்டுக்கு முன்பாக காணப்படும் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கியும் குறித்த குரல்பதிவு வௌியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்படாதவர்களுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குரல்பதிவு பொய்யானது எனவும் இதனை இலங்கை பொலிஸ் வௌியிடவில்லை எனவும் பொலிஸாரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தக் குரல்பதிவை வௌியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.