உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

by Staff Writer 26-11-2024 | 3:43 PM

Colombo (News 1st) பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகள் அவசர இலக்கமான 117 ஊடாக தமது தகவல்களை வழங்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவ்வித தடையுமின்றி பரீட்சையை எதிர்கொள்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனிடையே, கனமழையால் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களிலேயே பரீட்சை எழுத முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்தைத் தவிர அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு நேர்ந்தால் அது தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என திணைக்களம் கூறியுள்ளது.

அவசர நிலைமைகளின் போது மாத்திரமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.