புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகராக தெரிவு

10ஆவது பாராளுமன்றின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல மற்றும் பிரதி சபாநாயகராக டொக்டர் மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவு

by Staff Writer 21-11-2024 | 3:23 PM

Colombo (News 1st) 10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகர் பதவிக்கு கலாநிதி அசோக ரன்வலயின் பெயர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் முன்மொழியப்பட்டது.

இதனை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.

அதற்கிணங்க சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கிணங்க கலாநிதி அசோக ரன்வல சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலியின் பெயரை சபை முதல்வர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார்.

இதனை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வழிமொழிந்தார்.

சபையின் தீர்மானத்திற்கமைய 10ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக டொக்டர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

10ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான யோசனையை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி ரணசிங்க இதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரால் ஜனாதிபதியின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.