இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரொன்றை இலங்கை கைப்பற்றி இற்றைக்கு 27 வருடங்கள் ஆகிவிட்டன.
இறுதியாக அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி 1997 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொரை 3 - 0 என கைப்பற்றியுள்ளது.
அப்போது சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
அதன் பிறகு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்து சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடியதுடன் 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் 1 - 1 எனும் ஆட்டக்கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அந்தத் தொடரிலும் இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரே செயற்பட்டிருந்தார்.
அதன் பிறகு இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர்களில் இந்திய அணியே வெற்றிபெற்று வந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளும் மழை காரணமாக கைவிடப்பட்டு தொடர் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இவ்வாறு தான் இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் வரலாறு அமைந்துள்ளது.
அந்த வகையில் 27 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இலங்கை அணி இவ்வருடம் நெருங்கியுள்ளது.
எவ்வாறாயினும், அது அவ்வளவு இலகுவானதல்ல.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராத் கொஹ்லி, கே.எல் ராகுல், ரிஷப் பான்ட், சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஐயர் என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. அவர்களின் துடுப்பாட்ட ஆற்றலை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு உள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை இலங்கை அணி கடந்த காலத்தைவிட இந்தத் தொடரில் சிறப்பாகவே செயற்பட்டுவருகின்றது.
குறிப்பாக 2ஆவது போட்டியில் ஜெப்ரி வென்டர்சே அபாரமாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.
காலங்காலமாக சுழல்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை இப்போது ஒரு சிறந்த சுழல்பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறுகின்றமை யாவரும் அறிந்ததே.
அந்தக் குறை நிவர்த்திக்கப்பட்டால் நிச்சயமாக இலங்கை அணியால் பல வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதையே இந்தியாவுடனான 2ஆவது போட்டி உணர்த்தியது.
அதேவேளை, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு உள்ளது.
இந்திய அணியை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்டயா, ஜஸ்பிரிட் பும்ரா, ரவிந்ர ஜடெஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல்தான் இந்தத் தொடரை எதிர்கொண்டுள்ளது.அப்படியிருந்தும் இந்திய அணி பலமாகவே தென்படுகின்றது.
அந்த சூழலை மாற்றியமைத்து இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சை சவாலாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு உள்ளது.
குறிப்பாக பெத்தும் நிஸ்ஸங்க, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித்தலைவர் சரித் அசலங்க, கமிந்து மென்டிஸ் ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடினால் இலங்கை அணியால் நிச்சயம் சவாலான ஓட்ட எண்ணிக்கையை குவிக்க முடியும்.
இவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் பட்சத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக திறமையை வௌிப்படுத்தினால் வரலாற்றை மாற்றியமைத்து இந்தியாவுக்கு எதிராக 27 வருடங்களின் பின்னர் சர்வதேச ஒருநாள் தொடரை கைப்பற்றிய பெருமையை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.