இலங்கை சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி

by Staff Writer 16-02-2026 | 10:34 PM

Colombo (News 1st) 2026 இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சுப்பர் 08 சுற்றுக்கான வாய்ப்பை தன்வசப்படுத்தியது.

அவுஸ்திரேலியாவுடனான 08 விக்கெட்களால் வெற்றி பெற்றமையின் ஊடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.

கண்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்ற இந்த தீர்மானமிகு போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும் அணித்தலைவர் மிச்செல் மார்ஷ் 54 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர்.

பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 03 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர 02 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

182 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18 ஓவர்களில் 02 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸங்க 52 பந்துகளில் சதம் பெற்று ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்றார்.

இலங்கை அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய பெத்தும் நிஸ்ஸங்க T20 அரங்கில் பதிவு செய்த தனது 02ஆவது சதமாகவும் இது பதிவானது.

இம்முறை T20 கிரிக்கட் தொடரில் சதம் பெற்ற முதலாவது வீரராகவும் பெத்தும் நிஸ்ஸங்க பதிவானார்.

குசல் மென்டிஸ் 51 ஓட்டங்களையும் பவன் ரத்னாயக்க 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பெத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.