ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியனானது இலங்கை

முதல் தடவையாக ஆசிய கிரிக்கெட் மகுடத்தை சூடிய இலங்கை மகளிர் அணி

by Rajalingam Thrisanno 28-07-2024 | 6:23 PM

மகளிர் ஆசிய கிரிக்கெட் சாம்பியன் மகுடத்தை முதல் தடவையாக இலங்கை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினாலும் இலங்கை வீராங்கனைகளின் துடுப்பாட்டம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருந்தது.

குறிப்பாக கடைசி ஓவர்களில் போட்டி கடும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை பொய்யாக்கி அதிரடி காட்டிய இலங்கை வீராங்கனைகள் 8 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றியை அடைந்து இலங்கை இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தம்புளையில் இன்று(28) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை கண்டுகளிக்க பெரும் திரளான இரசிகர்கள் குவிந்திருந்ததுடன் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவே இலங்கை வீராங்கனைகளின் சகலதுறை ஆட்டம் அமைந்திருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களைக் குவித்தது.

நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா 47 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களை விளாசினார்.

ரிச்சா கோஷ் 30 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்ரிகர்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கவிசா தில்ஹாரி 2 விக்கெட்டுகளையும் உதேசிகா பிரபோதினி, சச்சினி நிசன்சலா, அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.

இரண்டாவது ஓவரின் 4ஆவது பந்தில் நட்சத்திர வீராங்கனையான விஸ்மி குணரத்ன ஓர் ஓட்டத்துடன்  ரன்அவுட் ஆனார்.

இலங்கை மகளிர் அணி அப்போது 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனாலும், அடுத்து இணைந்துகொண்ட அணித்தலைவி சமரி அத்தபத்து மற்றும் ஹர்சித்தா சமரவிக்ரம ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சமரி அத்தபத்து 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை விளாசினார்.

சமரி ஆட்டமிழந்தாலும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய  ஹர்சித்தா சமரவிக்ரம 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகளுடன் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கவிசா தில்ஹாரி 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரியுடன் 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து வரலாற்று வெற்றியை ஈட்டியது.

போட்டியின் சிறந்த வீராங்கனை விருது ஹர்சித்தா சமரவிக்ரம வசமானது.

தொடரின் சிறந்த வீராங்கனை விருதை சமரி அத்தபத்து தன்வசப்படுத்திக்கொண்டார்.