T20 கிரிக்கெட் தொடர்: மகுடம் சூடிய இந்தியா

2024 T20 கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக மகுடம் சூடிய இந்தியா

by Staff Writer 30-06-2024 | 6:04 PM

Colombo (News 1st) 2024ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியன் மகுடத்தை இந்தியா தனதாக்கியது.

தென்னாபிரிக்க அணியுடன் நேற்று(29) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஒட்டங்களை பெற்றது.

ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடனும் சூரியகுமார் யாதெவ் 3 ஓட்டங்களுடனும் ரிஷப் பண்ட் ஓட்டமற்ற நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அஷர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

விராட் கோலி இருபதுக்கு 20 போட்டிகளில் தனது 38ஆவது அரைச்சதத்தை கடந்து 76 ஒட்டங்களுடன் ஆட்டழிழந்தார்.

அஷர் பட்டேல் 47 ஓட்டங்களையும் சிவம் டூபே 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

கேசவ் மஹராஜ் மற்றும் என்ரிச் நோர்ஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Heinrich Klaasen 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இதேவேளை, இந்திய அணியின் வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.