இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 15-06-2024 | 7:08 PM

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் K.D.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்டமூலத்தை தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேடியறிந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் கடந்த வருடம் ஜூன் மாதம் 11 ஆம் திகதி இந்த அமைச்சரவை உப குழு  நியமிக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இந்த அமைச்சரவை உப குழுவில் அங்கம் வகித்தனர்.

கிரிக்கெட் துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினருடனும் ஆலோசித்து கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி 
இக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், தேசிய ஆடவர் மகளிர் அணிகள், 19 ,17 வயதிற்குட்பட்ட பிரிவு அணிகள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான கிரிக்கெட் நிர்வாகம், பயிற்சி மற்றும் இருப்பு, வௌிப்படைத்தன்மை, தொழில் தன்மை மேம்பாடு, திறன், சமத்துவம், நியாயப்பாடு மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் மூலதனமாகக் காணப்படும் பாடசாலை, மாவட்ட, மாகாண, கழக மட்டத்திலான மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளன.

அதன்படி, அமைச்சரவை உப குழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையினால் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பிற்கான சட்டமூலத்தை தயாரிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் K.D.சித்ரசிறியின் தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்