RDA பொறியியலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

by Staff Writer 11-06-2024 | 5:52 AM

Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கமைய, கிராமிய வீதி மற்றும் கிராமங்களில் பாலங்கள் நிர்மாணிக்கும் பணிகளிலிருந்து தமது உறுப்பினர்கள் விலகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹேமச்சந்திர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்க முடியாதுள்ளமை மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, இன்று(11) முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அரச நில அளவையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் நில அளவையாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை எனவும் நில அளவையாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 40ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.