மலாவி துணை ஜனாதிபதி உயிரிழந்ததாக அறிவிப்பு

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

by Bella Dalima 11-06-2024 | 5:32 PM

Malawi மலாவியின் துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா (Saulos Chilima), அவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் பயணம் செய்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது. 

இதன்போது, துணை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்ததாக மலாவி அரசாங்கம் அறிவித்துள்ளது.  

Chikangawa மலைத்தொடரில் பயணித்துக்கொண்டிருந்த போது விமானம் விபத்திற்குள்ளானது. 

இதனையடுத்து, மலாவி ஜனாதிபதி Lazarus Chakwera, இன்றைய தினத்தை நாட்டில் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார். 

"துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்" என்று ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை காலை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

வடக்கு மலாவியின் விபத்து இடம்பெற்ற மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சிக்கு பிறகு இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

நாட்டின் தலைநகர் லிலோங்வேயில் ( Lilongwe) இருந்து புறப்பட்ட இராணுவ விமானம் நேற்று (10)  காலை விபத்திற்குள்ளானது. 

விமானம் லிலாங்வேக்கு வடக்கே சுமார் 380 கிமீ (240 மைல்) தொலைவில் உள்ள Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி விபத்திற்குள்ளனதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மலாவியின் துணை ஜனாதிபதியாக சிலிமா பதவி வகித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரசாங்க திட்டங்களில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டதுடன், கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.