ஜனாதிபதி ரணில் - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - சிரேஷ்ட அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

by Staff Writer 10-06-2024 | 6:20 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய சிரேஷ்ட அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(10) இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலையை மையமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவிருக்கும் கைத்தொழில் வலயம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

புதிய பொருளாதார மாற்றச்சட்டத்தின் மூலம் விவசாயம், சுகாதார கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விரைவான தீர்மானத்தை எட்டுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தோட்ட லயன் அறைகள், தோட்ட கிராமங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் எனவும் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலையீட்டின் மூலம் அந்தந்த கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இந்தியாவின் புதுடெல்லியில் இன்று(10) நடைபெற்றுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இதன்போது உறுதியளித்தார்.

இலங்கை - பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதுடன், மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் தேர்தல் நடைபெற இருப்பதால், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் மாநாட்டில் பங்குபற்றுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தலின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதாக பங்களாதேஷ் பிரதமரிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க