உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை

by Bella Dalima 26-04-2024 | 3:01 PM

Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (26) உத்தரவிட்டார்.

கொழும்பு நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சுனந்த லியனபத்திரண, அவரது மனைவி, கொழும்பு நகரசபையின் முன்னாள் உறுப்பினர் தேவிகா மாத்தற ஆரச்சி, சமீர சத்துரங்க மற்றும் புபுது லக்மால் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட ஏனைய தரப்பினர் ஆவர். 

முதலாவது சந்தேகநபரான சமீர சத்துரங்க என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையை விதித்த நீதவான், உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஏனைய 04 சந்தேகநபர்களுக்கும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் வீதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தமை, அமைச்சரின் கடிதத்தைக் காட்டி அழுத்தங்களை பிரயோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாரஹேன்பிட்டி - தாபரே மாவத்தையிலுள்ள பல குடிசை வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றுவதற்கு முற்பட்டபோது, அதற்கு இடையூறு விளைவித்ததாக உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

அன்றைய தினம் விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை இன்று வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டார்.

சாட்சியாளர்கள் மீது அழுத்தம் விடுத்தால், பிணையை இரத்து செய்வதாக நீதவான் இன்று எச்சரிக்கை விடுத்ததுடன், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி விவாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்து உத்தரவிட்டார்.