தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்படாதது ஏன்?

தலைமன்னார் சிறுமி கொலை: தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்படாதது ஏன் என நீதவான் கேள்வி

by Bella Dalima 25-04-2024 | 4:26 PM

Colombo (News 1st) தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கு மன்னார் நீதவான் K.L.M சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், அவர் இதுவரை கைது செய்யப்படாததால், வவுனியா சிறைச்சாலை பொலிஸ் அத்தியட்சகரிடமும் தலைமன்னார்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் நீதவான் கேள்வியெழுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், அடுத்த தவணை விசாரணையின் போது சந்தேகநபரை கைது செய்து மன்றில் ஆஜராக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதனையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையில் மன்னார் சட்டத்தரணிகள் சிறுமியின் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.