சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல்

by Bella Dalima 25-04-2024 | 7:04 PM

Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர், Sun Haiyan நேற்று (24) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த சந்திப்பில் பொருளாதாரம்  மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீள மீட்டெடுக்க ஒரு மில்லியன் புதிய தொழில்கள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்க உதவுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதினால், இதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் ​போது எடுத்துரைத்துள்ளார். 

மக்கள் எதிர்பார்க்கின்ற மக்களாட்சியை வழங்க தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக இதன்போது அவர்  குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரையும்  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர்  சந்தித்துள்ளார். 

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது  தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக ருவன்  விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை  சீன பிரதிநிதி பாராட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, Sun Haiyan அண்மையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.