உணவின்றி 5 நாட்களின் பின்பு மீண்டு வந்த இளைஞர்

சிவனொளிபாத மலையிலிருந்து குதித்து காணாமல்போன இளைஞர் 5 நாட்களின் பின்பு மீண்டு வந்தார்

by Rajalingam Thrisanno 25-04-2024 | 12:44 PM

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த 33 வயது இளைஞர் 5 நாட்களின் பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிலர் குறித்த இளைஞரை மீட்டு நல்லதண்ணி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக ஹட்டன் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 19 ஆம் திகதி சிவனொளிபாத மலைக்கு சென்றிருந்ததுடன் அங்குள்ள பாதுகாப்பு வேலியை கடந்து கீழே குதிக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் பதிவாகியிருந்தது. 

இதனையடுத்து பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த இளைஞரை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்று 5 நாட்களான நிலையில் நேற்று(24) மாலை  குறித்த இளைஞர் தோட்டத் தொழிலாளர்கள் சிலரால் மீட்கப்பட்டுள்ளார். 

நல்லதண்ணி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட மரே தோட்டத்தின் இராஜமலை பிரிவில் சிவனொளிபாத மலை வனாந்தரத்தின் எல்லைப் பகுதியிலுள்ள ஓடையொன்றின் அருகில் அந்த இளைஞர் கிடப்பதாக நல்லதண்ணி பொலிஸாருக்கு தோட்டத் தொழிலாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், சிவனொளிபாத மலைப்பகுதியில் தனக்கு என்ன நடந்ததென நினைவில் இல்லை என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 

5 நாட்களையும் உணவின்றி கழித்துள்ள அந்த இளைஞர் தமக்கு பசிக்கும் போது நீரை அருந்தி பசியாற்றிக்கொண்டதாகவும் இரவுப் பொழுதை வனத்திலுள்ள குகைகளில் கழித்த தமக்கு காலில் சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இளைஞரை தேடும் பணிகள் 3 நாட்கள் முன்னெடுக்கப்பட்டும் அவர் கிடைக்காததால் தேடுதல் பணிகள் கைவிடப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் உயிருடன் வந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.