உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது: கோட்டாபய ராஜபக்ஸ அறிக்கை

by Bella Dalima 25-04-2024 | 6:25 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய குழுக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் அவ்வேளையில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட பிரிவான CID-இனால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும்,  தாக்குதலுக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாது போனதாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூரும் ஆராதனையில் பேராயர் கர்தினால் ஆண்டகை ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில், கோட்டாபய ராஜபக்ஸ இன்று இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களின் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பதால், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது கடினம் என தாம் கர்தினாலிடம் கூறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாம் பதவிக்கு வந்ததும் அப்போதைய குற்றவியல் விசாரணைத் திணைக்கள பணிப்பாளரை இடமாற்றம் செய்ததாகவும், விளக்கமறியலில் வைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அந்த தரப்பினரின் பொறுப்புகளை புறக்கணிக்க அல்லது வெளிப்படையாக அவர்களை விடுவிப்பதற்காக கர்தினால்  செயற்படுவதாகவும், தம் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கவனமாக அவதானிக்க வேண்டும் என்றும் கோட்டாய ராஜபக்ஸ  மேலும் தெரிவித்துள்ளார்.