இலங்கை, பாகிஸ்தான் விஜயம் மூலம் ஈரான் ஒரு சக்தி வாய்ந்த நாடு என்ற செய்தியை உலகிற்கு வழங்கியுள்ளது: ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 25-04-2024 | 7:18 PM

Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் விஜயத்தின் மூலம் உலகிற்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தலைநகர் தெஹ்ரானில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பிய வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டதன் மூலம் ஈரான் ஒரு சக்தி வாய்ந்த நாடு என்ற செய்தியை பிராந்தியத்திற்கும் உலகிற்கும் வழங்கியுள்ளதாக  ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது எதிரிகளை வலுவான மற்றும் கௌரவமான இடத்தில் இருந்து நடத்துவதாகவும் நட்பு நாடுகளுடன் ஈரான் தொடர்ந்தும் வலுவாக பயணிப்பதையே இந்த விஜயம் வௌிப்படுத்துவதாகவும் கலாநிதி இப்ராஹிம் ரைசி சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த விஜயங்கள் சில காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் முதற்கட்டமாக  உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை திறந்து வைத்து, ஈரானின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். 

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் இரண்டாம் கட்டம்  என ஈரான் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன்  இருதரப்பு  பிராந்திய , சர்வதேச உறவுகள், சந்தை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை தொடர்ந்தும்  மேம்படுத்த ஈரான் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.