ஈரான் ஜனாதிபதி விஜயம்: விசேட போக்குவரத்து திட்டம்

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

by Staff Writer 24-04-2024 | 7:38 AM

Colombo (News 1st) ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி பயணிக்கும் பகுதிகளை உள்ளடக்கி விசேட பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இதனிடையே, கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான அதிவேக வீதி இன்று(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றிரவு(23) விசேட ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த காலப்பகுதியில் அதிவேக வீதியில் இருந்து பேலியகொடை, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை, பொரளை, D.S.சேனநாயக்க சந்தி, ஹோட்டன் சதுக்கம், ஹோட்டன் சுற்றுவட்டம், கிறீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, புனித மைக்கல் வீதி, காலி வீதியில் இருந்து கோட்டை வரையான மார்க்கம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் வரையிலான மார்க்கம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.