கடிதங்களை அனுப்பாமல் நேரடியாக விவாதத்திற்கு வருமாறு அனுர குமாரவிற்கு சஜித் அழைப்பு

by Bella Dalima 23-04-2024 | 6:52 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி தலைவருடனான விவாதத்திற்கு  திகதியை அறிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி நேற்றிரவு ஐக்கிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கும் அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விவாதத்தை நடத்த முடியுமான சில தினங்களை தேசிய மக்கள் சக்தி அதில் குறிப்பிட்டுள்ளது.

மே 07, 09, 13 அல்லது 14 ஆம் திகதிகளில் இந்த விவாதத்தை நடத்த முடியும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தீர்மானித்த பின்னர் நேரம், எவ்வளவு நேரம் விவாதம் நடத்துவது, இடம் மற்றும் ஔிபரப்பு செய்யும் அலைவரிசையை தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் இந்த விவாதம் தொடர்பிலான இணைப்பாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திற்கு இணங்கவில்லையென்றால், அது தொடர்பில் விரைவில் அறிக்குமாறும்   கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வீரகெட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசிய மக்கள் சக்தியின் அழைப்பிற்கு சஜித் பிரேமதாச பதிலளித்தார்.

கடிதம் எழுத வேண்டிய தேவையில்லை எனவும் மே மாதத்தில் இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

இதிலிருந்து தப்பி ஓடாமல், இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், கோழைகளாக தப்பித்து ஓடாது, விவாதத்திற்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

பொருளாதார குழுவினருக்கிடையிலான விவாதத்திற்கு அச்சமா எனவும், போதிய அறிவு இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வருமாறு எதிர்கட்சி தலைவர் தேசிய மக்கள் சக்தியினரை அழைத்துள்ளார்.