சுதந்திரக் கட்சி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விவகாரம் தொடர்பில் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

by Bella Dalima 19-04-2024 | 3:50 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அதன் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க குறிப்பிட்டார். 

கட்சியின் இரு தரப்பினராலும் இதுவரை தமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளதாக,  R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களுக்கு எதிராக, கட்சியின் பதில் பொதுச் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். 

இதனிடையே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு குழுவினரும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விடயங்களை முன்வைத்துள்ளனர். 

சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் புதிய நியமனங்கள் ஆகியன தொடர்பான விடயங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட  தடையுத்தரவு மே  மாதம் 09 ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாக, இலங்கை சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.