இந்தியாவில் இடம்பெற்ற பாரதிய ஜனதா கட்சி கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்பு

by Bella Dalima 02-05-2024 | 7:26 PM

Colombo (News 1st) பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு அனுபவங்களையும், ஊக்குவிப்புகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று (01) இந்தியாவில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இலங்கையின் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்றுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் வௌியுறவுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி Vijay Chauthaiwale-இனால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாரதிய ஜனதா கட்சியினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க, 10 நாடுகளின் 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சித் தலைவர் ஜே. பி. நட்டாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இந்திய வௌியுறவு அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்னவையும் அவர்கள் சந்தித்ததாக பாரதிய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது.

அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார உத்திகள் மற்றும் முழுமையான தேர்தல் படிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவுஸ்ரேலியாவின் லிபரல் கட்சி, இஸ்ரேலின் லிக்குட் கட்சி, ரஷ்யாவின் யுனைட்டட் ரஷ்யா கட்சி ஆகியவற்றுடன் வியட்நாம், பங்களாதேஷ், உகண்டா, தன்ஸானியா, மொரிஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளின் சில கட்சிகளும் கலந்துகொண்டிருந்தன.